“ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லாதது வருத்தமளிக்கிறது” என தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளடக்கிய உலகக் கோப்பை தொடருக்கான ஸ்குவாடை இந்திய அணி தேர்வு செய்துள்ளது. அதுவும் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் நமக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. நம் ஊருக்கேற்ற டீமை தேர்வு செய்துள்ளனர். இந்தியாவில் போட்டிகள் நடப்பதால் கோப்பையை நாம் வெல்ல வாய்ப்புகள் அதிகம். நம் ஊரில் விளையாடுவது நமக்கு பெரிய பலம். நான் மிகவும் ஆர்வமாகவும், இந்தியா மீண்டும் கோப்பை வெல்லும் என்பதில் நம்பிக்கையுடனும் இருக்கிறேன்.
அனைத்து அணிகளும் டஃப் கொடுக்கும் நிலையில்தான் உள்ளன. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கி வருகிறார்கள். இஷான் கிஷன், சுப்மன் கில் போன்ற வீரர்கள் வளர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினால் அவர்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என்ற தற்போதைய சூழல் ஆரோக்கியமானதுதான்” என்றார்.
அவரிடம், “20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக வீரர் இல்லாத இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் விளையாட போகிறது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடராஜன், “ஆமாம். அஸ்வின் இல்லை. வருத்தமாகத்தான் இருக்கிறது. குறைந்தபட்சம் ஒருவராவது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அணியில் இருப்பார். ஆனால், தற்போது இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அஸ்வினும் இடம்பெறவில்லை. எல்லோரையும் போல எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஸ்போர்ட்ஸில் இது நடக்கும்தான்” என்றார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர்கள் ஒருவரும் அங்கம் வகிக்காத இந்திய அணியை உலகக் கோப்பை தொடருக்கு அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). கடைசியாக இதே போல கடந்த 2003 உலகக் கோப்பை தொடரின்போது தமிழக வீரர்கள் இடம்பெறாத இந்திய அணியை கங்குல் தலைமையில் பிசிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours