நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள “அன்னபூரணி” திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், படத்தின் கடைசி காட்சியில் பிரியாணி செய்வதற்கு முன்பு ஹிஜாப் அணிந்து நமாஸ் செய்வது போல காட்டப்பட்டுள்ளது என்று நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அன்னபூரணி”. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த படம் சமீபத்தில் “நெட்பிளிக்ஸ்” ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் இந்து மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி கடந்த 3 நாட்களுக்கு முன் பஜ்ரங்தள் அமைப்பு மும்பை ஓசிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
இதனிடையே இன்று இந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு என்ற அமைப்பின் நிறுவனர் ரமேஷ் சோலங்கி,
தென் மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது..
‘அன்னபூரணி’ திரைப்படம் கடவுள் ராமரை இழிவுபடுத்துவதுடன், இந்து மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு உள்ளது.
கோவில் பூசாரியின் மகளாக நடித்துள்ள நயன்தாரா, கடைசி காட்சியில் பிரியாணி செய்வதற்கு முன்பு ஹிஜாப் அணிந்து நமாஸ் செய்வதாக காட்டப்பட்டு உள்ளது.
மற்றொரு காட்சியில் நயன்தாரா நண்பர் பாத்திரமாக வரும் பர்கான் இறைச்சி வெட்டும்படி அவரை மூளை சலவை செய்கிறார். அதுமட்டும் இன்றி ராமரும், சீதாவும் இறைச்சி சாப்பிட்டதாக கூறுகிறார்.
மேலும் நயன்தாரா கோவிலுக்கு செல்லாமல் பர்கானின் இடத்திற்கு இப்தாருக்கு செல்லும் மற்றொரு காட்சி உள்ளது.
எனவே நடிகை நயன்தாரா, இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா மற்றும் படத்தில் தொடர்புடையவர்கள் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும்,
லவ் ஜிகாத்தை ஊக்குவித்ததாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours