இரவு முழுக்க சிறையில் இருந்த அல்லு அர்ஜுன்.. அதிகாலையில் விடுவிப்பு !

Spread the love

ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியின்போது படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.14) அதிகாலை ஹைதராபாத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். விடிய விடிய சிறையில் அவர் இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுன் கைதுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியின்போது படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நாம்பள்ளி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில், அவருக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து அவர் இன்று (டிச.13) அதிகாலை அவர் ஹைதராபாத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சிறையின் வேறு ஒரு வாயிலின் வழியாக அவர் வெளியேறிச் சென்றார்.

சர்ச்சை, கைது, ஜாமீன்.. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி (39) என்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்தார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார்.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் நேற்று (டிசம்பர் 13) அல்லு அர்ஜுனை காவல் துறையினர் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து விசாரணைக்காக அவர் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கோரி அல்லு அர்ஜுன் வழக்கறிஞர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை மாலையில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில், “சிறப்பு திரையிடலுக்குச் சென்றால், இப்படியான ஒரு துரதிஷ்வசமான நிகழ்வு நடைபெறும் என தெரிந்தே அல்லு அர்ஜுன் அங்கு சென்றுள்ளார்” என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி ஜுவ்வாடி ஸ்ரீதேவி, “நடந்த சம்பவத்துக்கு அவர் மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்? இத்தனைக்கும் அவர் அனுமதி பெற்று தான் அங்கு சென்றிருக்கிறார். ஒரு நடிகர் என்பதற்காக அவர் மொத்த பொறுப்பையும் ஏற்க முடியுமா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். பின்னர் அல்லு அர்ஜுனுக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை அல்லு அர்ஜுன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

திட்டமிட்ட சதி.. இதற்கிடையில் நடிகர் அல்லு அர்ஜுனை சிறைத்துறை நிர்வாகம் திட்டமிட்டே இரவு முழுவதும் சிறையில் வைத்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர், “தெலங்கானா நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் பிரதி நேற்றிரவே சஞ்சலகுட்டா சிறைத்துறைக்கு கிடைத்துவிட்டது. ஆனாலும் திட்டமிட்டே சிறைத்துறை அதை மறைத்து அல்லு அர்ஜுனை இரவு முழுவதும் சிறையில் இருக்கும்படி செய்துள்ளது. இதற்கு சிறை நிர்வாகம் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours