சென்னை: “நான் செய்தது தவறுதான். ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் ரஜினி தொலைபேசியில் அழைத்து பேசியது கலங்கவைத்தது” என்று இயக்குநர் தேசிங்கு பெரியசாமி உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இவர் தீவிரமான ரஜினி ரசிகர். தற்போது சிம்பு நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி தொலைபேசி வாயிலாக தேசிங்கு பெரியசாமியை பாராட்டினார். இந்த தொலைபேசி உரையாடல் லீக்காகி விட்டது. இது இணையத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்தச் சமயத்தில் நடைபெற்ற விஷயங்கள் குறித்து தேசிங்கு பெரியசாமி பேசியிருக்கிறார்.
அதில் “ரஜினி சார் எனக்கு தொலைபேசியில் அழைத்து பாராட்டியபோது அதனை ரெக்கார்ட் செய்தேன். பின்பு வெளிநாட்டில் இருக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பினேன். அங்கிருந்து எப்படியோ ரஜினி பேசிய ஆடியோ லீக்காகிவிட்டது. அதில் தனக்காக கதை செய்யுமாறு ரஜினி சாரும் பேசியிருந்தார். அது வெளியாகிவிட்டதால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டது. எனது வாழ்க்கையில் சந்தோஷமான நாள் அப்போது மோசமான நாளாகிவிட்டது. அந்த ஆடியோ பதிவு வெளியானதில் இருந்து 2 நாட்களுக்கு யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்தேன். ரஜினி சார் என்ன நினைப்பார், தவறாக நினைத்திருப்பார் என நினைத்தேன்.
நான் கடும் மன உளைச்சலில் இருக்கிறேன் என்று நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொண்டு ரஜினி மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். “கவலைப்படாதீர்கள். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் இதெல்லாம் சகஜம். சந்தோஷத்தில் குடும்பத்தினரிடம் பகிர்ந்தோம். அது வெளியாகிவிட்டது. அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? எப்போது தோன்றினாலும் தொலைபேசியில் அழையுங்கள்” என்று சொன்னார் ரஜினி சார். ஒருத்தர் கஷ்டத்தில் இருக்கிறார் என்பது தெரிந்து உடனே அழைத்து பேசியபோது அற்புதமாக இருந்தது. அவர் மீண்டும் அழைத்து பேசியபோது நான் பதிவு செய்யவில்லை” என்று தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours