சென்னை: ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை தன் அனுமதி இல்லாமல் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தில் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் ரூ.60 லட்சம் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. இந்தப் படம் உலக அளவில் ரூ.242 கோடி வசூலைத் தாண்டியது. இதில் கமல்ஹாசன் நடிப்பில் 1991-ல் வெளியான ‘குணா’ படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இதனிடையே, ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை தன்னுடைய அனுமதி இன்றி ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தில் பயன்படுத்தியதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா படக்குழுவுக்கு ‘பதிப்புரிமை மீறல்’ தொடர்பான நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது.
இதற்கு பதிலளித்திருந்த ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனி, “இந்தப் பாடலுக்கான உரிமையை நாங்கள் முறையாக பெற்றுள்ளோம். ஒரு நிறுவனம் தெலுங்கு பதிப்பின் உரிமையையும், மற்றொரு நிறுவனம் மற்ற மொழி பதிப்புக்கான உரிமையையும் பெற்றிருந்தது. பிரமிட் மற்றும் ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் இருந்தும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலுக்கான உரிமையை பெற்று விட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.
இருப்பினும் இளையராஜா அதனை ஏற்க மறுத்ததாகவும் ரூ.2 கோடியை இழப்பீடாக கேட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படக்குழு இளையராஜாவுக்கு இழப்பீடாக ரூ.60 லட்சத்தை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
+ There are no comments
Add yours