பாலசந்தரை போல புதுமைகளை, புதுமுகங்களையும் அறிமுகப்படுத்திய வேறு எந்த இயக்குநரும் இல்லை- கமல் நெகிழ்ச்சி பதிவு.

Spread the love

சென்னை: “என்னைப் போல பல நடிகர்களை தனக்கேதும் பயனில்லாத போதும், தன் தொழிலுக்கு பயனளிப்பார்கள் என்று அறிமுகப்படுத்தியவர். விடாமுயற்சியாக புதுமைகளையும், புது முகங்களை அறிமுகப்படுத்திய வேறு எந்த இயக்குநரும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை” என மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் அவரைப் புகழ்ந்துள்ளார்.

இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள வீடியோவில், “பாலசந்தர் பற்றி குறிப்பிட்ட நாளில் பேச வேண்டும், அவரது பிறந்த நாளில் பேசுங்கள் என்று சொல்லி நினைவுபடுத்துகிறார்கள். எனக்கு அப்படி நினைவுகூர்ந்து குறித்து வைத்துக் கொள்ளும் நாட்கள் கிடையாது. நான் அவரைப் பற்றி பேசாத நாட்களே கிடையாது. என்னைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அந்த உண்மை தெரியும்.

என்னைப் பொறுத்தவரை பாலசந்தர் என் வாழ்க்கையில் சில முன்னேற்றங்கள் தந்தார் என்பதற்காக மட்டும் போற்றப்படக் கூடியவர் அல்ல. என்னைப் போல பல நடிகர்களை தனக்கேதும் பயனில்லாத போதும், தன் தொழிலுக்கு பயனளிப்பார்கள் என்று அறிமுகப்படுத்தியவர்.

விடாமுயற்சியாக புதுமைகளையும், புதுமுகங்களை அறிமுகப்படுத்திய வேறு எந்த இயக்குநரும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை. நானும் கிட்டத்தட்ட 60 வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறேன். அப்படிப் பார்க்கும்போது என்னுடன் சம்பந்தப்படாமல் அவர் இருந்திருந்தாலும், அவருடைய பெயர் என்னிடமிருந்து விடுபடாது. என் வாழ்விலும், என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையிலும் அவர் செய்திருக்கும் மாற்றங்கள் மறக்க முடியாதவை.

கட்டுப்பாடுடன் செயல்படும் விதத்தை கற்றுக் கொடுத்தவர் அவர். என்னைப் போல பலரை அவர் உருவாக்கி வைத்துள்ளார். அவர் வீட்டு காம்பவுண்டுக்குள் அடக்க முடியாத குடும்பத்தை உருவாக்கி வைத்துள்ளார். எங்களுடன் அவர் இன்னும் இருக்கிறார்” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours