சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி? – தொடக்கத்தில், குற்றவாளியை என்கவுன்டர் செய்யக் கூறி போராட்டக் காட்சிகள் வருகின்றன. ‘இங்க பொண்ணுங்களுக்கு எங்க பாதுகாப்பு இருக்கிறது? பொறுக்கிகளுக்குத்தான் பாதுகாப்பு இருக்கிறது’ என்ற வசனம் அந்தப் போராட்டக் காட்சியின் பின்னணியை ஊகிக்கத் தூண்டுகிறது. பின்னர் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் காட்டப்படுகிறது. அங்கு போலீஸார் தடயங்களைச் சேகரிக்கின்றனர். மக்கள் போராட்டமும், கிஷோர், ரித்திகா சிங் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
‘ஒரு வாரத்துல என்கவுன்டர் பண்ணியே ஆகணும்’ என காவல் துறை உயர் அதிகாரி கூற, ‘தேவையில்ல சார், ஒரு வாரம் ரொம்ப அதிகம், மூணு நாள் போதும்’ என்ற வசனத்துடன் ரஜினியின் அறிமுகம் வருகிறது. அனிருத்தின் மெலோடியான ஹம்மிங் ட்யூன் பேக்ரவுண்டில் ரஜினி நடந்து வருகிறார். அமிதாப் பச்சன் ‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்ற வசனத்துடன் அறிமுகமாகிறார். அவரை பத்திரிகையாளர்கள் சூழ்வதும், பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பது போன்ற காட்சிகளும் வருகின்றன. பின்னர், தொடர்ச்சியாக ராணா டகுபதி, பஹத் ஃபாசில், துஷாரா விஜயன் என அனைத்து கதாப்பாத்திரங்களின் அறிமுகமும் ட்ரெய்லரில் அணிவகுக்கின்றன.
‘நேரத்தோட அரும தெரிஞ்ச ஒருத்தனாலதான் சாதிக்க முடியும்’, ‘திருடனா இருக்கிறதுக்கு முகமூடி தேவையில்லை, கொஞ்சோண்டு மூளை இருந்தா போதும்’, ‘அநீதியை நீதியாலதான் வெல்லணும், அநீதியை இன்னொரு அநீதியால வெல்லக் கூடாது’, ‘அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியா இருக்கிறதவிட, அதிகாரத்தை கையில எடுக்கிறதுல தப்பே இல்ல சார்’ என ட்ரெயலரில் வரும் ஷார்ப்பான வசனங்கள் கவனம் பெறுகின்றன. இறுதியாக ‘நீங்க என்ன எத்தனை ஊருக்கு மாத்தி அடித்தாலும், அவன் என்கிட்ட தப்பவே முடியாது சார்’ என்று ரஜினி பேசும் வசனத்துடன் ட்ரெய்லர் நிறைவடைகிறது.
என்கவுன்டர், காவல் துறை, பத்திரிகையாளர்கள், போராட்டம், என பரபரப்பான காட்சிகள், ரஜினியின் மாஸ் என்ட்ரி, சண்டைக் காட்சிகள் என ட்ரெய்லர் முழுவதும் நிரம்பியிருக்கிறது. இத்திரைப்படம் வரும் அக்.10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
+ There are no comments
Add yours