கேரளாவில் ரயில் தண்டவாளத்தை கடக்க முதியவர் ஒருவர் முயற்சித்த போது, அதிவேகமாக வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மயிரிழையில் இடிக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் நடந்ததாக சொல்லப்படுகிறது. அதில், முதியவர் ஒருவர் திரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கிறார்.
அப்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. உடனே அந்த முதியவரை வர வேண்டாம் என்று பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் கூச்சலிட்டனர். ஆனால் அவர் கேட்கவில்லை. அதற்குள் ரயில் அருகில் வந்துவிட்டது. இதன் காரணமாக திகிலின் உச்சத்திற்கு அங்கிருந்தவர்கள் சென்றுவிட்டனர்.
தண்டவாளத்தின் குறுக்கே வந்த நபரை கண்டதும் ரயில் ஓட்டுநர் ஹாரன் சத்தம் எழுப்பி கொண்டே வந்தார். அதிவேகமாக வரும் போது திடீரென ரயிலை நிறுத்த முடியாது. சில மீட்டர் தூரம் சென்று தான் நிறுத்த முடியும். அதற்குள் அசம்பாவிதங்கள் நிகழ அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே ஹாரன் சத்தம் எழுப்பி ஓட்டுநர் எச்சரிக்கை விடுத்தார்.
சரியாக ரயில் பிளாட்பாரத்திற்குள் வேகமாக கடக்கவும், முதியவர் பிளாட்பாரத்தில் கால் வைத்து ஏறி உள்ளே வரவும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரமே இருந்தது. ஒரு வழியாக முதியவர் தப்பித்து விட்டார். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு நடக்கக்கூடாது என்று பலரும் அறிவுறுத்தினர்.
+ There are no comments
Add yours