கரூர்: கரூரில் தனிப்படை போலீஸார் 7 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், 8 அரிவாள், கத்திகளை பறிமுதல் செய்தனர். கரூர் ராயனூர் பழனிவேல் நகரை சேர்ந்தவர் முகேஷ் என்கிற ராமசுப்பிரமணி (38). இவர் அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமாநிலையூரைச் சேர்ந்த ஷோபனாவை 2வது திருமணம் செய்துள்ளார். ஷோபனாவின் தோழியான ரம்யா அவ்வப்போது ஷோபனா வீட்டில் வந்து தங்கி சென்றுள்ளார்.
ரம்யாவுக்கும், தொழிற்பேட்டையைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் இடையே கூடாநட்பு இருந்துள்ளது. இதனால் விஜய் குடும்பத்தாருக்கும், ஷோபனாவுக்கும் இடையே கடந்த செப். 10ம் தேதி பிரச்சனை ஏற்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஷோபனாவின் கணவர் முகேஷ் விஜயின் உறவினர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் அவரது வீட்டில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தாந்தோணிமலை போலீஸார் முகேஷ் வீட்டில் சோதனை நடத்தி ஆயுதங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன் (கரூர் நகரம்), முத்துக்கு மார் (பசுபதிபாளையம்) ஆகியோர் தலைமையில் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு முகேஷ் அளித்த தகவலின்பேரில் அவரது கூட்டாளிகளான நாமக்கல் மாவட்டம் சின்னமுதலைப்பட்டி ரஞ்சித் சக்கரவர்த்தி (38), திருச்சி பழூர் கோபால் என்கிற பெரியகோபால் (48), திருப்பூர் மாவட்டம் காங்கேயம் செந்தில் என்கிற ஓட்டக்காது செந்தில் என்றது சின்னசாமி (51), ஈரோடு மாவட்டம் சென்னிமலை யுவராஜ் (35), வெள்ளாளபாளையம் மூர்த்தி (56), கரூர் கோட்டையண்ணன் கோயில் தெரு பாலு என்கிற பாலகிருஷ்ணன் (36) ஆகிய 6 பேரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், 6 துப்பாக்கித் தோட் டாக்கள், 8 அரிவாள், கத்திகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றம் 1 ஆம் தேதி நேற்று ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை கைது செய்யும்போது தப்பியோடிய முகேஷ் பாலத்தில் இருந்து தவறி விழுந்து கால் முறிந்ததால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி. கே.பெரோஸ்கான் அப்துல்லா தனிப்படையினருக்கு இன்று (அக். 10ம் தேதி) பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
+ There are no comments
Add yours