மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு- திருச்சியில் சோகம்

Spread the love

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர், சாலப்பட்டி, கீழத்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கராசு. இவரது மகன் திவாகர் (17). அய்யம்பாளைம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில், தங்கராசு, தனது மகன் திவாகருடன் பெரமூர் பகுதியில் உள்ள கோரை வயலில் கோரை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சிறுவன் திவாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை தங்கராசு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த முசிறி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தங்கராசுவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து முசிறி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். முசிறியில் நேற்று பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த நிலையில், மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவன் தீக்காயம்: திருச்சி அருகே மணிகண்டம் பகவதி அம்மன் தெருவில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி உரசியதில் 10 வயது சிறுவன் பலத்த தீக்காயம் அடைந்தான். திருச்சி மாவட்டம் மணிகண்டம், பகவதி அம்மன் தெருவைச் சேர்ந்த நடராஜன் மற்றும் கலா தம்பதியரின் மகன் யுவராஜ் (10). இவர் இன்று காலை வீட்டின் பின்புறமுள்ள வயலுக்குச் சென்றார். அப்போது, அப்பகுதியிலிருந்த மின்கம்பத்தின் மின்சாரக் கம்பி (ஸ்டே) அறுந்து மின்கம்பி தாழ்வாக தொங்கி உள்ளது. சிறுவன் மீது தாழ்வாக தொங்கிய மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கியதில் அவரது வலது தோள்பட்டை மற்றும் முதுகில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் தீக்காயங்கள் வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் நவ.1-ம் தேதி மகேந்திரமங்கலம் அருகே சன்னாசிமடத்தைச் சேர்ந்த நடராஜன் (73) என்ற முதியவர் தனது வீட்டில் எஃப்எம் ரேடியோவில் இயக்கியபோது, மின்கசிவு காரணமாக மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த அவரை அவரது மகன் மணிகண்டன் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தொட்டியம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours