மின் இணைப்பு பெறுவதற்கு லஞ்சம்- செயற்பொறியாளர் கைது

Spread the love

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம், தெற்குசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (64). இவர், தனது 46 சென்ட் நன்செய் நிலத்தை தனது மகன் பேச்சியப்பனுக்கு தானமாக வழங்கி பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

அந்த நிலத்துக்கு மின் இணைப்பு பெறுவதற்கு சிவகிரி மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தை மாரிமுத்து நாடியுள்ளார். இதையடுத்து, சிவகிரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் நிலத்தை நேரில் பார்வையிட வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி முத்துக்குமார் மற்றும் மின்வாரிய போர்மேன் மருது பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று நிலத்தை பார்வையிட்டுள்ளனர்.

இதையடுத்து, விவசாயத்துக்கு குறைந்த கட்டணத்தில் மின் இணைப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறும், அதற்கு போர்மேன் மருது பாண்டியன் உதவி செய்வார் என்றும் முத்துக்குமார் கூறியுள்ளார். அதன்பேரில் கடந்த 23ம் தேதி, பத்திரம் மற்றும் ஆவணங்களை பெற்று, மகன் பேச்சிமுத்துவிடம் கையெழுத்து வாங்கி சிவகிரி இ-சேவை மையத்தில் வைத்து மாரிமுத்து மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ளார்.

இதையடுத்து, மறுநாள் மாரிமுத்துவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலத்துக்கு வரும்படி உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரும் போர்மேன் மருது பாண்டியனும் அழைத்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற மாரிமுத்துவிடம், மின் இணைப்பு கட்டணமாக ரூ.16,499 கொடுக்க வேண்டும் என்றும், மின் இணைப்பு வழங்குவதற்கு தனக்கும், போர்மேனுக்கும் ரூ.35 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் முத்துக்குமார் கூறியுள்ளார்.

பின்னர் பேரம் பேசி, மின் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணம் போக ரூ.5 ஆயிரம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மாரிமுத்து இது தொடர்பாக தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை முத்துக்குமாரிடம் அலுவலகத்துக்கு நேரில் சென்று இன்று வழங்கியுள்ளார் மாரிமுத்து. இதையடுத்து, டிஎஸ்பி-யான பால்சுதர், ஆய்வாளர் ஜெய ஸ்ரீ, உதவி ஆய்வாளர் கரவி மற்றும் போலீஸார் விரைந்து சென்று உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், போர்மேன் மருதுபாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours