விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்திருக்கும் நிலையில், போலீஸார் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த இளைஞர் அற்புதராஜ் (30) என்பவர் மீது அடிதடி வழக்கு சம்பந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனால் தலைமறைவாக இருந்து வந்த அற்புதராஜை, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் தேடி வந்ததுள்ளனர்.
இந்நிலையில் ஜிஆர்பி தெருவில் உள்ள தனது வீட்டுக்கு வந்த அற்புதராஜை நேற்று விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து பிடிபட்ட அற்புதராஜை, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீஸார் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேடம்பட்டில் உள்ள விழுப்புரம் மாவட்ட சிறையில் நேற்று மாலை போலீஸார் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை (வெள்ளிக்கிழமை) அற்புதராஜுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறைத்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அற்புதராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த அற்புதராஜின் உறவினர்கள், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு வந்து அற்புதராஜின் உடலை கண்டு கதறி அழுதனர். போலீஸார் தாக்கிய காரணத்தாலேயே உடல் நிலை பாதிக்கப்பட்டு அற்புதராஜ் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
+ There are no comments
Add yours