சென்னை: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது வரும் அக்.14 அன்று தீர்ப்பளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கைதான தனியார் பள்ளி தாளாளர் சாம்சன் வெஸ்லி (52), தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் (40), ஆசிரியை மார்கரேட் ஜெனிபர் (35) உள்பட 6 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.தனபால் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான சிவராமன், சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் நாங்கள் அனைவரும் கடந்த 43 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கோரப்பட்டது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக சிறுமிகள் புகார் அளித்தபோது, அதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி, சம்பவத்தை மறைக்க முற்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது, என எதிர்ப்பு தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் கோரிய வழக்கில் வரும் அக்.14-ம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும், என அறிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours