மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். விடுதியில் தங்கியிருந்த பரிமளா, சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர். அதிகாலையில் ஃப்ரிட்ஜ் வெடித்ததில் விடுதி முழுவதும் தீ பரவியதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து விவகாரத்தில் விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா பெண்கள் விடுதியில் இன்று காலை 5 மணியளவில் பிரிட்ஜ் வெடித்ததன் காரணமாக விடுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து மாணவிகள் விடுதியை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். இது குறித்து தகவலறிந்து வந்த மதுரை பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் ஒரு மணி நேரமாக போராடி புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விடுதியில் ஏற்பட்டுள்ள தீயினால், கரும்புகை உருவானதில் மூச்சுத்திணறலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த பரிமளா, சரண்யா ஆகிய 2 மாணவிகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் விடுதிவார்டன் புஷ்பா, மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகிய 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை விசாகா பெண்கள் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டு 2 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
+ There are no comments
Add yours