ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இறைச்சி கடை உரிமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில் போட்டியா, குடும்ப பிரச்சினையா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் கிருஷ்ணம நாயக்கர்பட்டியை சேர்ந்தவர் பிரசாந்த் (28). இவருக்கு திருமணமாகி 4 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த ஒன்றரை வருடமாக பிரசாந்த் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக எரிச்சநத்தம் பகுதியில் பன்றி இறைச்சிக்கடை நடத்தி வந்த நிலையில் கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் குன்னூர் விளக்கு அருகே ஆடு இறைச்சி கடையை துவக்கியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பிரசாந்த்
இன்று காலை வழக்கம்போல கடையை திறக்க பிரசாந்த் சென்று கொண்டிருந்தபோது, அவரை மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த கிருஷ்ணன்கோவில் போலீசார், பிரசாந்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரசாந்த் தொழில் போட்டியின் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் குடும்ப பிரச்சினையால் கொலை நடந்துள்ளதா எனும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற கொலை சம்பவத்தால் கிருஷ்ணன் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours