சென்னை: ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண் சந்தியாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் திருமணத்துக்காக ஆன்லைனில் பெண் தேடி வந்தார். அப்போது, ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியா என்ற இளம்பெண், மகேஷ் அரவிந்துக்கு அறிமுகமாகி உள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது மணப்பெண் சந்தியாவுக்கு 12 பவுன் தங்க நகைகளை மணமகன் வீட்டார் அணிவித்துள்ளனர்.
திருமணத்துக்குப் பிறகு சந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகேஷ் அரவிந்த், சந்தியாவின் செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார். அதில், பல ஆண்களுடன் சந்தியா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்துள்ளது. அதுதொடர்பாக கேட்டபோது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தியா திடீரென வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
இது தொடர்பாக மகேஷ் அரவிந்த் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸில், சந்தியா தன்னை ஏமாற்றி திருமணம் செய்தும், தன்னிடமிருந்து ரூ. 50 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகைகளை மோசடி செய்து விட்டதாகவும் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் சந்தியா இதுபோல போலீஸ் அதிகாரி, தொழிலதிபர் என ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி திருமண செய்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் சந்தியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சந்தியா ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘எனக்கு எதிரான வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருவதால் ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி பி.தனபால், இந்த வழக்கில் போலீஸார் உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி சந்தியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
+ There are no comments
Add yours