சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்வோம் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் செல்போன்களை வைத்திருந்ததாக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரனை போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர். ஹரிதரன் அந்த செல்போன்களை திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் வீசிய இடத்தில் தீயணைப்பு துறை, நீச்சல் வீரர்கள் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீஸார் செல்போன்களை கைப்பற்றினர்.
இதையடுத்து, ஹரிதரனை போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில், வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் மீட்கப்பட்ட செல்போன்களை, மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, மற்ற செல்போன்களையும் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தடய அறிவியல் துறையினர் அந்த செல்போன்களில் இருந்து ஏதாவது தடயங்களை சேகரிக்க முடியுமா என சோதனை செய்து வருகின்றனர்.
அதன்படி, ஆற்றில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள செல்போனின் ஐஎம்இஐ எண்ணைக் கண்டுபிடித்து, அதில் எத்தனை சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, அந்த சிம் கார்டிற்கு எந்தெந்த எண்ணில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன, இதில் இருந்து எந்த எண்ணிற்கு அழைப்புகள் சென்றுள்ளன என்பனவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஹரிதரனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், திருவள்ளூரை சேர்ந்த தேமுதிக நிர்வாகி உள்பட 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும், தேமுதிக நிர்வாகி ஹரிதரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
விசாரணை முழுமையாக முடிவடைந்த பிறகு, ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவர்களுக்கும் பங்கு இருந்தால், அவர்களையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பல்வேறு ரவுடி குழுக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கும் நிலையில், அதில் முக்கிய நபராக கருதப்படும் பல்லாவரத்தை சேர்ந்த ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்தவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் பதுங்கி இருக்கும் அவரை பிடிக்க தனிப்படை போலீஸார் ஆந்திரா விரைந்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் மற்றொரு பிரபல ரவுடியான சம்போ செந்திலையும் போலீஸார் தேடி வருகின்றனர். ஆனால், அவர் தற்போது தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்த தென்னரசு என்பவரை, கடந்த 2015-ம் ஆண்டு தாமரைபாக்கத்தில் ஆற்காடு சுரேஷின் கூட்டாளிகள் கொலை செய்தனர். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் கூட்டாளியான பாம் சரவணன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாம் சரவணன் தென்னரசுவின் சகோதரர் ஆவார்.
இது ஒருபுறமிருக்க, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திரைமறைவில் உதவியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், வட சென்னையை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரையும் இந்த கொலை வழக்கில் போலீஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை விரிவடைந்து கொண்டே செல்வதால், இந்த கொலை பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலையில், இன்னும் பல அரசியல் பிரமுகர்கள், ரவுடி கும்பலை சேர்ந்தவர்களும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தகவல்கள் மற்றும் திருப்பங்கள் எற்பட்டு சினிமாவை மிஞ்சும் அளவுக்கு காட்சிகள் அரங்கேறி வருகின்றன. எது எப்படி இருந்தாலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் கண்டறிந்து கைது செய்வோம் என சென்னை போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours