சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் கொத்தடிமைகளாக வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தப்பட்ட 5 பேரை மீட்ட போலீஸார், அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்த பெண்ணையும் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கம் திருப்பதி நகர் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சிலர் கொத்தடிமைகளாக வீட்டு வேலை செய்து வருவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், நேற்று இரவு அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் ஒரு சிறுவன், சிறுமி உட்பட 5 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.
அவர்களிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், பூந்தமல்லியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், 20 வயது இளம்பெண் ஆகியோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் முன் பணமாக கொடுக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாகவும், ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 20 வயது இளம்பெண், 34 வயதான பெண் ஆகியோருக்கு 4 லட்சம் ரூபாய் முன் பணமாக கொடுக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாகவும் இந்த வீட்டில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், அந்த வீட்டில் வசித்து வந்த ரஷிதா என்ற பெண், இவர்கள் 5 பேரையும் அடித்து துன்புறுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வளசரவாக்கம் போலீஸில் அதிகாரிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில், 5 பேரையும் மீட்ட போலீஸார், அவர்களை மயிலாப்பூர், கெல்லீஸ், தாம்பரம் அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அந்த வீட்டில் வசித்து வந்த ரஷிதா என்ற பெண்ணை கைது செய்த போலீஸார், அவர் மீது குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், குழந்தைகளை கொடுமைப்படுத்துதல், கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours