திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மேலப்புதூரைச் சேர்ந்தவர் சத்தியநாதன் (57). இவரது மனைவி கிரேஸ் சகாயராணி (54). இவர் திருச்சி மாநகரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்களது மகன் சாம்சன் டேனியல் (31). இவர் லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். சகாயராணி பணியாற்றும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அரசு மருத்துவரான சாம்சன் டேனியல், பள்ளி அருகே மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிக்கு அடிக்கடி சென்று அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது போல கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு புகார் வந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் சாம்சன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மருத்துவம் பார்ப்பது போல் சென்று பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் திருச்சி அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பள்ளியில் 43 குழந்தைகள் படிக்கின்றனர். விடுதியில் 40 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட சமூகநலத் துறையிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலும் விடுதி நடத்துவதற்கான அனுமதி பெற வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட விடுதி உரிய அனுமதி பெறவில்லை. இதையடுத்து விடுதியில் உள்ள பள்ளி குழந்தைகளை மீட்டு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் கீழ் உள்ள விடுதிகளில் தங்க வைத்துள்ளனர்.
+ There are no comments
Add yours