திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி கொண்டாட பணம் தர மறுத்ததால் தள்ளுவண்டி உணவகம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக திருப்பூரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் போயம்பாளையம் அபிராமி திரையரங்கம் சாலை கணபதி நகரைச் சேர்ந்தவர் கணபதி (53). இவர் அப்பகுதியில் கணபதி உணவகம் என்ற பெயரில் தள்ளுவண்டி உணவகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று (செப் .3) புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், நான் போயம்பாளையம் கணபதி நகரில் கணபதி உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறேன்.
கடந்த 25-ம் தேதி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த முகிலன், ராசுகுட்டி, பாலாஜி உள்ளிட்ட 8 பேர் வந்து விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டனர். நானும் ரூ. 550 நன்கொடை வழங்கினேன். அதற்கு ரசீதும் வழங்கி விட்டுச் சென்றனர். இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வந்து 3 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினர்.
ஏற்கெனவே பணம் கொடுத்ததால் மீண்டும் கொடுக்க முடியாது என கூறியதால், என்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டதோடு ஹோட்டலுக்கு முன்புறம் தள்ளுவண்டியில் வைத்திருந்த இட்லி பாத்திரங்கள் மற்றும் பொருட்களை கீழே தள்ளிவிட்டும் , மின் விளக்குகளை உடைத்தும் சேதப்படுத்தி சென்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்துச் சம்பவம் குறித்த அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு சார்பில் இன்று (செப்4) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: இந்து முன்னணி பேரியக்கம் திருப்பூரில் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறது. வியாபாரிகளின் நலன் காக்க இந்து வியாபாரிகள் நல சங்கம், தொழில்துறையின் நலன் காக்க திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு, ஆட்டோ தொழிலாளர்களின் நலன் காக்க இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் இப்படி பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறோம்.
இந்து விரோதிகள் சிலர் விநாயகர் சதுர்த்தி விழாவின் மூலம் இந்து முன்னணியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், செயல்பட திட்டமிட்டு இருப்பதாக அறிகிறோம். எனவே இந்து முன்னணியில் பெயரை தவறாக பயன்படுத்தி வணிகர்கள் மற்றும் தொழில் துறையினருக்கு நெருக்கடி கொடுத்தால் 936458800 இந்த அலைபேசி எண்ணுக்கு தொடர்பு செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours