இளம் வயதில் அயர்லாந்து பிரதமராக பதவியேற்ற சைமன் ஹாரிஸ்!

Spread the love

அயர்லாந்தின் புதிய பிரதமராக 37 வயதான சைமன் ஹாரிஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அயர்லாந்தில் பிரதமராக இருந்து வந்த லியோ வராத்கர் கடந்த மாதம் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து ‘ஃபைன் கேல்’ கட்சியின் புதிய தலைவராக சைமன் ஹாரிஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், சைமன் ஹாரிஸுக்கு ஆதரவாக 88 வாக்குகளும், எதிராக 69 வாக்குகளும் பதிவாகின.

வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டின் தலைநகர் டூப்ளினில் உள்ள அதிபர் மாளிகையில் புதிய பிரதமராக 37 வயதே ஆன சைமன் ஹாரிஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இவர் முன்னாள் சுகாதார மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தவர். கொரோனா பேரிடர் காலத்தில் சைமன் ஹாரிஸ் திறம்பட செயலாற்றினார்.

இந்நிலையில் மிக இளம் வயதில் பிரதமர் பதவியேற்றுள்ள சைமன் ஹாரிஸுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சைமன் ஹாரிஸ் அயர்லாந்தின் மிக இளம் வயது பிரதமராக தேவர்வாகி உள்ளதற்கு வாழ்த்துகள். ஜனநாயக விழுமியங்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நமது வரலாற்று உறவுகள் உயர்ந்த மதிப்புக்குரியது. இந்தியா – அயர்லாந்து இருதரப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

சைமன் ஹாரிஸ், 20 வயதில் பல்கலைக்கழக படிப்பை பாதியில் கைவிட்டு அரசியலுக்குள் நுழைந்தார். 24 வயதில் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 30 வயதை எட்டுவதற்குள்ளாகவே அமைச்சரவையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours