ஹெனிகேன் நிறுவனம் 2,685 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது தொழிற்சாலைகளை வெறும் 90 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர். கடந்த ஒன்றரை வருடங்களாக தொடரும் இந்த போரினால், இருதரப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், உணவு தானியம் முதல் கச்சா எண்ணெய் வரை பல்வேறு பொருட்களின் விலையும் கூட உலக அளவில் அதிகரித்துள்ளது. அதிலும், இந்த போரினால் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளன. இதனால் அந்த பெரு நிறுவனங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது பிரபல பீர் தயாரிப்பு நிறுவனமான ஹெனிகேனும் இணைந்துள்ளது.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெனிகேன் நிறுவனம் பல ஆண்டுகளாக ரஷ்யாவில் பீர் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், போர் காரணமாக தொழிலில் நஷ்டத்தை சந்தித்த அந்த நிறுவனம் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தது. இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்னெஸ்ட் குழுமத்திடம் தனது ஆலைகளை விற்றுவிட்டு ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளது ஹெனிகேன்.
ரஷ்யாவில் கேன் பேக்கேஜிங் தொழிலில் ஈடுபட்டு வரும் ஆர்னெஸ்ட் நிறுவனம், ஹெனிகேன் நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டியதோடு, அதற்காக தீவிரமான முயற்சியில் இறங்கியது. ஹெனிகேனுக்கு சொந்தமாக ரஷ்யாவில் ஏழு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் சுமார் 1,800 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். எனவே தொழிற்சாலைகளை கைவிட்டு விட்டு வெளியேறுவதற்கு முறையான அனுமதிக்காக காத்திருந்த ஹெனிகேன், தற்போது அரசு அனுமதியுடன் தொழிற்சாலைகளை விற்றுள்ளது.
அதன்படி, ஏழு தொழிற்சாலைகளையும் வெறும் 1 யூரோவுக்கு விற்பனை செய்துள்ளது ஹெனிகேன் நிறுவனம். இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 90 ரூபாய் விற்பனை செய்துள்ளது. அதாவது ஒரு கேன் பீரின் விலையை விட குறைவான விலைக்கு தங்களது ஆலைகளை விற்பனை செய்துள்ளது அந்த நிறுவனம். இந்த தொழிற்சாலைகளின் மதிப்பு சுமார் 2,685 கோடி. இதனால், அந்த நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது.
+ There are no comments
Add yours