பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சித்ரால் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள சித்ரால் மாவட்டத்தில் தீவிரவாதிகள், ராணுவத்தினர் மீது கடந்த 9ம் தேதி இரவு தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்புக்குமிடையே நடைபெற்ற கடுமையான தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 6க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயங்களுடன் கைது செய்யப்பட்டனர். இது குறித்து ராணுவ மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு படையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் ஆதரவு அளித்து வருவதுடன், நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைபர் பக்துன்க்வா பகுதியில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தான் மற்றும் குனார் மாகாணங்களில் பயங்கரவாத நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்தது. கடந்த 8 மாதத்தில் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்பட தாக்குதல்களில் 389 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours