பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன.
அப்பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துளளது. இதையடுத்து, அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு போன்ற தாக்குதல்களை நடத்தினர். பின்னர்,தேவாலயங்களை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப்படுத்தியது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பஞ்சாப் மாகாண உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாக ஜியோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இச்சமபத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறியதாவது:- பாகிஸ்தானில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளை குறி வைத்து தாக்கப்பட்டதில் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். வன்முறை அல்லது மத ரீதியான அச்சுறுத்தல்களை அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பாகிஸ்தான் முழு விசாரணை நடத்த வலியுறுத்துகிறோம். அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours