அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இன்னும் ஒரு டி20 ஆட்டம் எஞ்சியிருக்கும் நிலையில், ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான இந்திய அணி 2வது டி20இல் வெற்றி பெற்று அசத்தியது.
இந்தியா-அயர்லாந்து இடையிலான 2வது டி20 கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதல் ஆட்டத்தில் டக்வொர் லீவிஸ் முறையில் இந்தியா வென்றது. இந்நிலையில், 2வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் ஃபீல்டிங் செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட், அரை சதம் விளாசி அசத்தினார். இது இவருக்கு 2வது சர்வதேச டி20 அரை சதம் ஆகும். சஞ்சு சாம்சன் 40 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
யஷஸ்வி 18 ரன்களிலும், திலக் வர்மா 1 ரன்னிலும் நடையைக் கட்டினர். ரிங்கு சிங், ஷிவம் துபே ஆகியோர் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசினார் ஷிவம் துபே. ரிங்கு சிங் 38 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். அயர்லாந்து 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.
அந்த அணியின் வீரர்கள் போராடியும் தோல்வியில் முடிந்தது. தொடக்க வீரர் ஆன்ட்ரூ 72 ரன்கள் விளாசினார். ஆனால், அவர் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, வேறு எந்த அயர்லாந்து வீரரும் சிறப்பாக விளையாடவில்லை. அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்ணோய், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இந்தத் தொடரை கைப்பற்றியது. கடைசி டி20 ஆட்டம் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
+ There are no comments
Add yours