டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்காதது தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில், ஜி-20 மாநாடு டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட உலகத் தலைவர்கள் பலரும் தங்களது டெல்லி பயணத்தை உறுதி செய்துள்ளனர். இவர்கள் மத்தியில் ரஷ்ய அதிபர் புதின், ஜி-20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். புதினைத் தொடர்ந்து, சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என தெரிய வந்துள்ளது.
ஜி-20 மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கும் சர்வதேச விவகாரங்களில் ஒன்றாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் விவகாரமும் இடம்பெற இருக்கிறது. இதனையடுத்து, ரஷ்ய அதிபர் புதினுக்கு பதிலாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொள்வார் என அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக தனது நிலைப்பாட்டினை, இந்திய பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு புதின் தெரிவித்து விட்டார்.
புதினைத் தொடர்ந்து சீன அதிபரும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங் பங்கேற்பார் என சீன அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சீனாவின் இந்த நிலைப்பாட்டின் பின்னணியில், அண்மையில் அந்நாடு வெளியிட்ட அதன் புதிய தரநிலை தேச வரைபடத்தை முன்னிட்டு, இந்தியா – சீனா இடையே எழுந்த உரசல் விவகாரம் உள்ளது.
ஜி 20 மாநாட்டுக்கு சீன அதிபர் வராதது குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஜி-20 மாநாட்டுக்காக இந்திய பயணத்துக்காக காத்திருக்கிறேன். மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளமாட்டார் என்ற அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்தேன். மாநாட்டில் அவர் பங்கேற்காவிட்டால், விரைவில் சந்தித்து பேசுவேன்’’ என்றார்.
+ There are no comments
Add yours