‘சாத்தான் 2’ ஏவுகணை அதன் கடமையாற்றலுக்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது, உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
தனது ஆர்.எஸ்.சர்மட் என்ற கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையின் தயார் நிலை குறித்து ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அணு ஆயுத திறன் கொண்ட இது உலகின் கொடிய ஏவுகணைகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிரம்மாஸ்திரமான இந்த சர்மட் ஏவுகணை, ’சாத்தான் -2’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.
மேற்கு நாடுகளை குறிவைத்து அணு ஆயுத தாக்குதலுக்கு ஏற்ற வகையில் சர்மட் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்டம் விட்டு கண்டம் தாவும் இந்த ஏவுகணையை ’எதிரிகளை இரண்டு முறை யோசிக்க வைக்கும்’ என்று ரஷ்ய அதிபர் புதின் பலமுறை சிலாகித்திருக்கிறார். சுமார் 208 டன் எடையுடன் 18 ஆயிரம் கிமீ வரை பறந்து தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை இடைமறித்து தாக்குவது கடினம்.
உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கிய 2 மாதங்களில், ரஷ்யா இந்த ஏவுகணையை ஏவி சோதனை செய்தது. அதன் பின்னர் 14 மாதங்கள் கழித்து இப்போதுதான் ஏவலுக்கு தயார் நிலையில் வைத்திருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே உக்ரைன் போர் முனையில் ரஷ்யா பின்னடைவை சந்தித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நவீன போர்த்தளவாடங்கள் உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதால், ரஷ்யா கணித்த வெற்றிவாய்ப்பு எட்டாது நீடிக்கிறது.
இந்த சூழலில் உக்ரைன் மற்றும் அதற்கு உதவும் நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை ஏவப்போவதாக ரஷ்யா அச்சுறுத்த ஆரம்பித்தது. ஆனால், உக்ரைன் ஆதரவு நாடுகள் அதனை பொருட்படுத்தவில்லை. எனவே, எச்சரிக்கை விடுத்தது போன்றே, சாத்தான் 2 ஏவுகணையை ஏவத் தயாராகி உள்ளது ரஷ்யா. சாத்தான் களமிறங்குவது ஒன்று போரினை முடித்து வைக்கும், அல்லது உலகம் எதிர்பார்த்திராத போர் மேகங்களுக்கு வழி வகுக்கும்.
+ There are no comments
Add yours