பிரிக்ஸ் அமைப்பை விரிவாக்குவதற்கு இந்தியா முழு ஆதரவு அளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருங்காலத்துக்கு ஏற்றபடி பிரிக்ஸ் அமைப்பை மாற்ற வேண்டியதன் தேவையையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முழுமையான அமர்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோதிக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீன அதிபர் சி ஜின்பிங், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோதி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் லூயிஸ் இன்னாசியோ லுலா டி சில்வா, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், சீன அதிபர் சி ஜின்பிங் ஆகியோர் குழுப் படம் எடுத்துக் கொண்டனர்.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வருங்காலத்துக்குத் தயாராக பிரிக்ஸ் அமைப்பை மாற்றுவதற்கு, நமது சமூகங்களையும் எதிர்காலத்துக்குத் தயாராக மாற்ற வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதில் தொழில்நுட்பம் முதன்மைப் பங்காற்றும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஜி 20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தைச் சேர்க்கவும் தனது ஆதரவைப் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.
மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்புக்கு ரஷ்யா தலைமை தாங்க உள்ளதாகவும், அப்போது இருநூற்றுக்கு மேற்பட்ட அரசியல், பொருளியல் மற்றும் பொதுநிகழ்ச்சிகள் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாகப் பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருநாட்டு அமைச்சர்கள் அதிகாரிகளும் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகப் பேச்சு நடத்தினர்.
இது குறித்துப் பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அதிபர் ராமபோசாவுடன் சிறப்பான சந்திப்பு அமைந்ததாகவும், இருநாடுகளிடையான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விரிவான விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார். வணிகம், பாதுகாப்பு, முதலீட்டுத் தொடர்புகள் குறித்த பேச்சுக்கள் முதன்மையாக இடம்பெற்றதாகவும் பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours