ட்ரோன்களைக் கொண்டு உக்ரைன் மீது மாபெரும் தாக்குதல் ஒன்றை ரஷ்யா நிகழ்த்தி இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத இந்த தாக்குதலால் உக்ரைன் நிலைகுலைந்து பின்னர் இயல்புக்கு திரும்பியது.
இஸ்ரேல் – காசா மோதல் காரணமாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் உலகின் பார்வையில் பின்தங்கிப் போயிருந்தன. ஆனால் ரஷ்யா எந்தவகையில் தனது போர் முன்னெடுப்புகளில் இருந்து பின்வாங்கவில்லை. ஒன்றே முக்கால் வருடமாகத் தொடரும் ரஷ்யாவின் தாக்குதல்களில் நாளுக்கு நாள் புதிய உத்திகளை பின்பற்றப்பட்டு வருகின்றன.
இதனிடையே ஆயுதத் தளவாடங்களின் கடுமையான பற்றாக்குறைக்கும் ரஷ்யா ஆளாகியுள்ளது. தனது விண்வெளி நுட்பங்களை வடகொரியாவிடம் விற்று, அவற்றுக்கு ஈடாக ஆயுதங்களை ரஷ்யா கொள்முதல் செய்தது. இவற்றுக்கு அப்பால் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதலில் தொடக்கம் முதலே, ஈரானின் ட்ரோன்கள் கைகொடுத்து வருகின்றன.
எனினும் முழுவீச்சில் அவற்றை ரஷ்யா பயன்படுத்தாது இருந்தது. இன்றைய தினம் அக்குறையை போக்கும் வகையில், ஈரான் ட்ரோன்களை ஒன்றாக அணிவகுக்கச் செய்தது உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா சரமாரித் தாக்குதலை மேற்கொண்டது. இது ரஷ்யாவின் இதுவரையில்லாத தாக்குதல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உக்ரைன் தரப்பிலான தகவல், ரஷ்யாவின் பெரும் ட்ரோன் தாக்குதல்களை உறுதி செய்துள்ளன. எனினும் பெரும்பாலான ட்ரோன்களை உக்ரைன் விமானப்படையினர் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் தொடங்கிய ட்ரோன் தாக்குதல் சுமார் 6 மணி நேரங்களுக்கு நீடித்ததில், கீவ் நகரம் இயல்பு வாழ்க்கையை தொலைத்தது.
கட்டிடங்கள் சேதம், கணிசமானோருக்கு காயம் என்பதற்கு அப்பால் பெரியளவிலான பாதிப்பில்லை எனவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களின் ரஷ்யாவின் ட்ரோன் வழித் தாக்குதல் உக்கிரமடையும் எனத் தெரிய வருகிறது. அதன் தொடக்கமாகவே கீவ் மீதான இன்றைய தாக்குதல் நிகழ்ந்திருப்பதாகவும் உக்ரைன் கணித்துள்ளது.
+ There are no comments
Add yours