குஜராத்தில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்” என்று பெருமிதம் தெரிவித்தார்.
காந்தி நகரில் இன்று தொடங்கிய ’துடிப்புமிகு குஜராத் உலக வர்த்தக மாநாடு 2024’-ல் பேசிய பிரதமர் மோடி, இதனை பெருமிதத்துடன் தெரிவித்தார். வரவிருக்கும் 25 வருடங்கள் இந்தியாவின் அமிர்த காலம் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனது இலக்கை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில், அதை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நாம் கொண்டுள்ளோம். எனவே, இந்த 25 ஆண்டுகாலம் இந்தியாவின் அமிர்த காலமாகும்” என்றார்.
அமிர்த காலத்தின் முதல் மாநாடு என்ற வகையில் தற்போதைய மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் மோடி கூறினார். “இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான பங்காளிகள்” என்று விருந்தினர்களை மோடி கௌரவப்படுத்தினார்.
இந்தியாவின் பொருளாதாரம் குறித்து மோடி பேசும்போது, “இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 11-வது இடத்தில் இருந்தது. இன்று, அனைத்து முக்கிய முகமைகளும் இந்தியா வரும் ஆண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் இருக்கும் என்று மதிப்பிடுகின்றன. அது நடக்கும் என்பது எனது உத்தரவாதம்” என்று உறுதி பொங்க தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யா, கிழக்கு தைமூர் அதிபர் ஜோஸ் ரமோஸ் ஹோர்தா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும், முன்னணி தொழில் நிறுவனங்களை சார்ந்தோரும் பங்கேற்றுள்ளனர்
+ There are no comments
Add yours