விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் சந்திரபாபுவை ஆந்திர சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்தனர்.
பின்னர் மருத்துவ காரணங்களுக்காக சந்திரபாபுக்கு ஆந்திரஉயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 31–ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 53நாட்களுக்குப் பிறகு சிறையில்இருந்து சந்திரபாபு விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது ஜாமீன் மனு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜுன ராவ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “ஒரு துறையில் தவறு நடந்தால், அதற்கு முதல்வர் நேரடியாக பொறுப்பாக மாட்டார். ஒருவேளை பொறுப்பு என்றால் அதற்கான ஆதாரங்களை சிஐடி போலீஸார் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.
ஜாமீன் வழங்கினால், அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற வாதம் சரியல்ல. ஏனெனில் இத்தனை காலம் அவர் வெளியில்இருந்துள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த வழக்கையே பதிவு செய்கிறீர்கள். எனவேஅவர் வெளியில் இருந்து சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதுநம்ப முடியாதது ஆகும். அவருக்குஇசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒருவர் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்று கூறுவதும் சரியல்ல” என்று தெரிவித்தார்.
இதையடுத்து சந்திரபாபு வுக்கு ரெகுலர் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வரும் 29-ம் தேதிக்கு பிறகு அரசியல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
சந்திரபாபுவுக்கு ரெகுலர் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டு முன் கட்சி நிர்வாகிகள் பட்டாசுவெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருப்பதி அலிபிரி அருகே தெலுங்கு தேசம் கட்சியினர் 108 தேங்காய்களை உடைத்து சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆந்திர மாநிலம் முழுவதும் பல ஊர்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
+ There are no comments
Add yours