மே 20 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Spread the love

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை இம்மாதம் 20ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் ஜாமீன் கோரி, அவரது வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பாக வாதிட்டனர்.

டெல்லியில் கலால் கொள்கை தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் 20ம் தேதி நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே தனது கைதை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக உள்ளார். தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொள்ளும்போது தற்போதைய சூழ்நிலைகள் அசாதாரணமானவை” என்றனர்.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இடைக்கால ஜாமீன் தொடர்பான வாதங்களை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதற்கு ஆட்சேபணை தெரிவித்தார். நீதிமன்றத்தில் அவர் கூறுகையில், “நாம் என்ன உதாரணத்தை முன் வைக்கிறோம்? சாதாரண மக்களை விட முதலமைச்சரை எப்படி வித்தியாசமாக நடத்த முடியும்? அவர் முதலமைச்சர் என்பதால் மட்டுமே எந்த விலகலும் இருக்க முடியாது” என்றார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கேஜ்ரிவால் வழக்கறிஞரிடம், “முதலமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது அவர் உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வரும். ஏனெனில் அது முரண்பாடுகளை உருவாக்கக்கூடும்.

தேர்தல்கள் இல்லாமலிருந்தால், எந்த இடைக்கால நிவாரணத்தையும் நீதிமன்றம் கொடுத்திருக்காது. அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை” என உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் இந்த வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்ததாக உச்சநீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours