மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான், கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த 2008 டிசம்பர் முதல் 2010 நவம்பர் வரை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பணியாற்றியவர் அசோக் சவான், மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் இவரும் ஒருவர். அசோக் சவான், முன்னாள் முதலமைச்சரான சங்கர் ராவ் சவானின் மகன் ஆவார். இவர் மகாராஷ்டிரா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் உள்பட கட்சியின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இந்நிலையில் அசோக் சவான், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். மேலும், எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
65 வயதான அசோக் சவான் இன்று மாலை சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர்களான பாபா சித்திக், மிலிந்த் தியோரா ஆகியோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய நிலையில் தற்போது அசோக் சவானும் கட்சியை விட்டு விலக உள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. முன்னதாக அசோக் சவான், காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலாவை நேற்று சந்தித்து கட்சி மீதான தனது அதிருப்திகளை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே அசோக் சவான் பாஜகவில் சேருவாரா என, அம்மாநில துணை முதல்வரான, பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னவீஸ் கூறுகையில், “அசோக் சவான் பற்றிய செய்திகளை கேள்விப்பட்டேன். இப்போது நான் சொல்லக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால், காங்கிரஸைச் சேர்ந்த பல நல்ல தலைவர்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். சில பெரிய முகங்கள் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு வருவார்கள் என நான் நம்புகிறேன். வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.
+ There are no comments
Add yours