மத்திய பட்ஜெட்…எதிர்பார்ப்புகள் !

Spread the love

2024-2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாரானால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் எல்லோராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மத்திய பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள் இருக்கும் என தற்போது விமர்சனம் வைக்கப்படுகிறது.

அந்த வகையில், விவசாயம், சமூக நலன், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு உள்ளிட்டவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு மக்களை கவரும் வகையில் அரசு பல புதிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் கூறப்படுகின்றது. அந்த வகையில் மக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் குறித்து இங்கு பார்ப்போம்…

வேலைவாய்ப்பு:

மத்திய அரசு இந்த முறை உள்கட்டமைப்பு செலவினங்களில் நிலையான கவனம்செலுத்தி, அதன்மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே வட இந்திய மாநிலங்களில் வேலைவாய்ப்பு பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இவற்றைப் போக்கும்விதமாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

பெண்கள்:

பெண்களைக் கருத்தில்கொண்டு அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் ஏதேனும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதிலும் ஏழைப் பெண் குடும்பங்கள் பயனடைவதை நோக்கமாகக் கொண்டு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது அல்லது அதுசார்ந்த துறைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி மேலும் மேம்படுத்தும் வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


விவசாயம்:

பாஜக ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு விவசாயக் கடன் இலக்கில் கணிசமான அளவு ரூ.22-25 லட்சம் கோடியாக உயர்த்தப்படலாம் என தெரிகிறது. நடப்பு நிதியாண்டில் அதிகளவில் விவசாயக் கடன் வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது. தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் நிறுவனக் கடன் கிடைப்பதை உறுதி செய்யும் எனவும் தெரிகிறது.

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்படுகிறது. எரிபொருள் விலையை குறைக்கும் வகையில் பலரும் ஆலோசனை கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் பட்ஜெட்டில் டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் ரூ.8-10 வரை குறைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.


வருமான வரி

இந்த முறையும் பட்ஜெட்டில் வருமான வரி குறித்த தகவல்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிகரித்துவரும் பணவீக்கத்தைச் சமாளிக்க, குறிப்பாக வருமான வரி தொடர்பான ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. முக்கியமாக பலர் பயன்படுத்தும் பழைய வரி விதிப்பு முறையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அனைத்து பத்திரங்களுக்கும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு விகிதம் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே மற்றும் இஸ்ரோ திட்டங்கள், புதிய விமான நிலையங்கள், எக்ஸ்பிரஸ் வே தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரயில்வே துறைக்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும், விவசாயம் மற்றும் கிராமப்புறங்களுக்கு வலுவான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் முன்வைக்கப்படலாம். மலிவு விலை வீடுகளுக்கு, அரசாங்கம் நிதியை சுமார் 15 சதவீதம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கலாம். அதுபோல் வளர்ந்துவரும் மருத்துவத் துறைக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதுபோல், கிரிப்டோகரன்சி குறித்த புதிய தகவல்கள் வரலாம் எனவும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் காப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours