மேக் இன் இந்தியா வரிசையில் ’மேட் இன் இந்தியா’வுக்கான பிரத்யேக லேபிள் திட்டம், புதிய ஆட்சி பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் அறிவிப்பாக உள்ளது.
மூன்றாம் முறையாக வெற்றிகரமாக பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றால் அதன் முதல் 100 நாட்களில் பல பிரத்யேக திட்டங்களை வரிசையாக வெளியிட தயாராகி வருகிறது. தேர்தல் களத்தில் பாஜகவுக்கு ஆதரவாகும் இந்த ஏற்பாடுகள், அதிகாரிகள் வாயிலாக கசியவிடப்பட்டும் வருகின்றன.
பாஜக என்றில்லாது புதிதாக ஆட்சியில் பொறுப்பேற்கும் எந்த அரசாங்கம் என்றாலும், இந்த திட்டங்கள் முதல் 100 நாட்களில் அமலுக்கு வரும். ஆனபோதும், நடப்பிலுள்ள பாஜக அரசின் முன்னெடுப்பிலான இந்த திட்டங்கள் அதன் பெருமைக்குரிய ஆட்சிப் பொறுப்பேற்பின் கொண்டாட்ட அடையாளமாக, முதல் 100 நாட்களில் வரிசையாக அறிவிப்பாக உள்ளன. அவற்றில் ஒன்றாக மேட் இன் இந்தியா லேபிள் திட்டமும் காத்திருக்கிறது.
இந்த திட்டமானது எலெக்ட்ரானிக்ஸ், மருந்துகள், தொலைத்தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகள் போன்ற பல்வேறு உற்பத்தித் துறைகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கும். இந்தியாவின் பெயரை உலகுக்கு சொல்லும் வகையில் இவை ’மேட் இன் இந்தியா’ லேபிள் அறிவிப்போடு இந்தியாவிலிருந்து பயணத்தை தொடங்கும்.
முன்னதாக கடந்தாண்டு நவம்பரில் ஒரு முன்னோடி நகர்வாக, ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் இந்திய அரசு நடத்தும் செயில் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளை உள்ளடக்கிய எஃகுத் துறையில் ’மேட் இன் இந்தியா’ பிராண்டிங்கை அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்தது. இதனைத் தொடர்ந்து வேறு பல தயாரிப்புகளிலும் இந்த மேட் இன் இந்தியா லேபிளை இனி பார்க்க முடியும்.
’மேட் இன் இந்தியா’ திட்டம் என்பது துவக்கமானது 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட, மத்திய அரசாங்கத்தின் ’மேக் இன் இந்தியா’ முயற்சியின் விரிவாக்கமாகும். கொரோனா பரவலின் போது, தடுப்பூசிக்காக உலகம் சீனாவைச் சார்ந்திருந்தபோது, இந்தியா தடுப்பூசியின் தன்னிறைவு பெற்றதோடு பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது. இதனையடுத்து இந்த ஏற்றுமதி தயாரிப்புகளை ஊக்குவிக்க அரசும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் இந்த வகையில் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இவை அனைத்துமாக சேர்ந்து மேட் இந்தியா லேபிள் ஜோதியில் ஐக்கியமாக இருக்கின்றன.
+ There are no comments
Add yours