டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
டெல்லியில், வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏரளமான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லிக்கு வரவுள்ள நிலையில், தலைநகர் டெல்லி விழா கோலம் பூண்டுள்ளது.
இதனால், டெல்லி முழுவதுமே பலத்த பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், ஜி20 மாநாட்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி..
“ஜி20 உச்சி மாநாட்டையொட்டி டெல்லியில் செப்டம்பர் 8 முதல் 10ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது” எண்டு கூறினார்.
முன்னதாக டெல்லியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஏற்கனவே செப்டம்பர் 7ஆம் தேதி பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், நாளை செப்டம்பர் 7 முதல் 10ஆம் தேதி வரை தலைநகர் டெல்லியில் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், ஜி20 மாநாட்டுக்கு கல்வி துறை ஊழியர்களின் உதவி தேவைப்பட்டால், அவர்கள் டெல்லியிலேயே தங்கியிருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் எனவும், கூடுதலாக, அனைத்து ஊழியர்களும் தொலைபேசி மூலம் அணுகப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கல்வி துறை ஊழியர்களின் சேவைகள் தேவைப்படலாம் என்பதால், இந்த காலகட்டத்தில் வெளியூர் விடுமுறைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் டெல்லி அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours