ஜம்மு-காஷ்மீரில் 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை 370 இடங்களில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
ஜம்மு காஷ்மீரில் ரூ. 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, எரிசக்தி மற்றும் குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
ஜம்முவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அங்கு முதல் மின்சார ரயில், சங்கல்டன் – பாரமுல்லா இடையே ரயில் சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட 1500 அரசு அதிகாரிகளுக்கு பணி நியமன உத்தரவுகளை பிரதமர் மோடி வழங்கினார். அதைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது: உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாங்கள் வளர்ச்சியடைந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்குவோம். உங்கள் 70 ஆண்டுகால கனவுகள், வரும் ஆண்டுகளில் மோடியால் நிறைவேற்றப்படும்.
முன்பு, ஜம்மு – காஷ்மீரில் இருந்து வெடிகுண்டுகள், கடத்தல்கள் மற்றும் பிரிவினை பற்றிய கவலையளிக்கும் செய்திகள் மட்டுமே வந்தன. ஆனால் இப்போது ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியடைந்து முன்னேறி வருகிறது. முன்பு 370வது சட்டப் பிரிவு ஜம்மு- காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அது அகற்றப்பட்டுவிட்டதால் ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டுவிட்டதால், தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெற மக்கள் உதவ வேண்டும்.
‘ஆர்டிகல் 370’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது என கேள்விப்பட்டேன். இது சரியான தகவல்களைப் பெற மக்களுக்கு உதவும். ராணுவத் தளபதிகள் உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். தற்போது போராட்ட கால அட்டவணை வெளியாவதில்லை. சந்தைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் ஆண்டு முழுவதும் திறந்திருக்கின்றன” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
+ There are no comments
Add yours