மேற்குவங்க எம்எல்ஏக்களுக்கான மாதச்சம்பளத்தை திடீரென ரூ.40 ஆயிரம் வரை உயர்த்தி அம்மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது, அம்மாநில முதல் அமைச்சராக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார். இவர் கடந்த 2011 முதல் தொடர்ந்து 3வது முறையாக மேற்கு வங்க மாநில முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
தற்போது மேற்கு வங்காளத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தான், எம்எல்ஏக்களின் சம்பளத்தை உயர்த்தி மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார். இருப்பினும் பிற அலவன்ஸ் தொகைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், ‛‛பிற மாநிலங்களை ஒப்பிடும்போது மேற்கு வங்க மாநிலத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் எம்எல்ஏக்களுக்கான சம்பளம் என்பது ரூ.40 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது” என அறிவித்துள்ளார். இதனால் எம்எல்ஏக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தமட்டில் கேபினட் அமைச்சர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மாதச்சம்பளம், அலவன்ஸ்கள் மூன்று வகைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி பார்த்தால், தற்போது கேபினட் அமைச்சர்கள் மாதச்சம்பளமாக ரூ.11,000 + பிற அலவன்ஸ்கள் சேர்த்து ரூ.1.10 லட்சம் வரை பெற்று வருகின்றனர். அதேபோல் அமைச்சர்கள் மாதச்சம்பளமாக ரூ.10 ஆயிரத்து 900 + பிற அலவன்ஸ்கள் சேர்த்து ரூ.1.10 லட்சம் வரை பெற்றனர். எம்எல்ஏக்கள் ரூ.10 ஆயிரம் சம்பளத்துடன் அலவன்ஸ்களுடன் சேர்த்து மாதம் ரூ.81 ஆயிரம் பெற்று வந்தனர்.
இத்தகைய சூழலில் தான் தற்போது எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் சம்பளம் என்பது ரூ.40 ஆயிரம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பளம் + அலவன்ஸ் என மாதம் ரூ.81 ஆயிரம் பெற்று வந்த எம்எல்ஏக்கள் இனி ரூ.1.21 லட்சம் வரை பெறுவார்கள். அதேபோல் அதேபோல் சம்பளம் + அலவன்ஸ் என மாதம் ரூ.1.10 லட்சம் பெற்று வந்த அமைச்சர்கள் வரும் மாதங்களில் ரூ.1.50 லட்சம் வரை பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்யும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 220 எம்எல்ஏக்களும், கூட்டணி கட்சியான பிஜிபிஎம் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளன. எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவுக்கு மொத்தம் 69 எம்எல்ஏக்கள் உள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவை தவிர பிற கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எப் கட்சிக்கு தலா ஒரு எம்எல்ஏக்களும், 2 தொகுதி காலியாகவும் உள்ளன.
+ There are no comments
Add yours