காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் “மாசு வரி” என்கிற பெயரில் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு 10% கூடுதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 63வது ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சியாம்) மாநாடு இன்று நடைபெற்றது.
அந்த நிகழ்வில் பேசிய நிதின் கட்கரி, “அதிகரித்து வரும் மாசுபாடு குடிமக்களுக்கு உடல்நலக் கேடு விளைவிக்கும். இதனால், டீசல் மூலம் இயங்கும் வாகனங்ககளுக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டியை விதிக்க முன்மொழியப்பட்ட கடிதத்தை இன்று மாலை நிதியமைச்சரிடம் வழங்க உள்ளேன். நாட்டில் தற்போது பெரும்பாலான வாகனங்கள் டீசலில் இயங்குகின்றன.”
“எனவே மாசுபாட்டை குறைக்க தொழில்துறையினர் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அரசாங்கம் அதை கட்டாயப்படுத்தும் நிலைமையை உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. டீசல் கார்களின் பங்களிப்பு ஏற்கனவே நாட்டில் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், உற்பத்தியாளர்கள் சந்தையில் அவற்றை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும்.” என்று கட்கரி கூறினார்.
மேலும், டீசல் மிகவும் அபாயகரமான எரிபொருள் என்பதை குறிப்பிட்ட அவர், “டீசலுக்கு குட்பை சொல்லுங்கள். இல்லையெனில் டீசல் கார்களை விற்பது கடினமாகிவிடும் அளவுக்கு வரியை அதிகப்படுத்துவோம்.” என்று கூறினார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, மாருதி மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட ஆட்டோ பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours