சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 திட்டம் 2006-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் ஆதித்யா -எல்1 விண்கலம் இன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்கலமான ஆதித்யா -எல்1 பிஎஸெல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதுக்கு, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 திட்டம் 2006-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ ஆதித்யா-எல்1ன் இன்றைய ஏவுதல் இஸ்ரோ மற்றும் இந்தியாவிற்கு மற்றொரு பெரிய சாதனையாகும். மீண்டும் ஒருமுறை இஸ்ரோவுக்கு வணக்கம் செலுத்துகிறேன். 2006 முதல் 2023 வரை ஆதித்யா திட்டம் கடந்து வந்த பாதையை எடுத்துரைக்க வேண்டியது கடமை.
2006: இந்திய வானியல் கழகம் மற்றும் இந்திய அறிவியல் அகாடமியின் விஞ்ஞானிகள் ஒரு கருவியுடன் கூடிய சூரிய ஆய்வகம் என்ற கருத்தை முன்மொழிந்தனர்.
மார்ச் 2008: விஞ்ஞானிகள் இந்த திட்டத்தை இஸ்ரோவுடன் பகிர்ந்து கொண்டனர்.
டிசம்பர் 2009: இஸ்ரோ ஆதித்யா-1 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது
ஏப்ரல் 2013: முன்னாள் தலைவர் யு.ஆர்.ராவின் ஒரு பெரிய தலையீட்டிற்குப் பிறகு, இஸ்ரோ விஞ்ஞான சமூகத்திடமிருந்து அதிக அறிவியல் கருவிகளுக்கான முன்மொழிவுகளைக் கோரி “வாய்ப்பு அறிவிப்பை” வெளியிட்டது.
ஜூன் 2013: இது தொடர்பாக பெறப்பட்ட அறிவியல் திட்டங்களை இஸ்ரோ மதிப்பாய்வு செய்தது.
ஜூலை 2013: ஆதித்யா-1 என பெயரிடப்பட்ட திட்டத்தின் பெயர் தற்போது ஆதித்யா எல்-1 என மாற்றம் செய்யப்பட்டது.
நவம்பர் 2015: ஆதித்யா-எல்1க்கு இஸ்ரோ முறைப்படி ஒப்புதல் அளித்தது” என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours