புதிய பார்லிமென்ட் வளாகத்தில் சோழர்களின் செங்கோல் இடம்பெற்று, தமிழகத்தின் பெருமை உலகெங்கும் பறைசாற்றப்பட்டது. இந்த வகையில் அடுத்ததாக தமிழகத்தின் மற்றொரு பெருமை, இந்த ஜி – 20 மாநாட்டில் இடம்பெற்றுள்ளது.
பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் தான் ஜி – 20 மாநாடு நடக்க உள்ளது. இதில், அமைப்பில் இடம்பெற்றுள்ள 20 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள ஒன்பது நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த 29 நாடுகளையும் கலாசார ரீதியில் இணைக்கும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாகத்தான் தலைவர்கள் மாநாட்டுக்கு செல்ல உள்ளனர். இந்தப் பாதையில், 29 நாடுகளின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கலைப்பொருட்கள் காட்சிபடுத்தப்பட உள்ளன.
இந்த வகையில், நம் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், ஐந்து விதமான மையப் பொருட்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. இதில், தமிழகத்தில் சோழர் காலத்திய சிலைகள் உருவாக்கும் கலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போதும் உலகளவில் புகழ்பெற்ற இந்த கலையின்படி, செம்பு, பித்தளை, இரும்பு, ஈயம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் ஆகிய அஷ்ட தாதுக்கள் எனப்படும் எட்டு உலோகங்களை உருக்கி பிரமாண்ட நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
பண்டைய சோழர் முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த நடராஜர் சிலை, 28 அடி உயரம், 21 அடி அகலம், 25 டன் எடை கொண்டது. இதன் மதிப்பு 10 கோடி ரூபாயாகும்.
உலகிலேயே மிகப் பெரிய நடராஜர் சிலையாக இது விளங்குகிறது. இதை தயாரிக்கும் பணி, தமிழகத்தின் கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் இருக்கும் தேவ சேனாதிபதி சிற்பக் கூடத்துக்கு வழங்கப்பட்டது. ஸ்தபதிகள் தேவ.ராதாகிருஷ்ணன், தேவ.கண்டன், தேவ.சுவாமிநாதன் உள்ளிட்டோர் சிலையை வடிவமைத்துள்ளனர்.
+ There are no comments
Add yours