மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டுறவு வங்கியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் விசாரணையில் முதல் குற்றப்பத்திரிக்கை முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது மனைவிக்கு தொடர்புடைய நிறுவனம் ஒன்று குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று கூட்டுறவு வங்கியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் கூடுதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
கூடுதல் குற்றப்பத்திரிகையில், அஜித் பவார் பெயர் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெயர் இதில் சேர்க்கப்படவில்லை. ஆனால், அந்த குற்றப்பத்திரிகையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரஜக்த் தன்பூரே, அவரது தந்தை மற்றும் முன்னாள் எம்எல்ஏ பிரசாத் தன்பூரே, முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரஞ்சீத் தேஷ்முக், சுபாஷ் தேஷ்முக் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் தான் சரத் பவாரிடம் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சிலபேருடன் அஜித் பவார் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா – பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் பதவி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்து. அதற்கு முன்னதாக சரத் பவாருடன் இணைந்து, காங்கிரஸ் கூட்டணியில் அஜித் பவார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours