இந்தியாவின் பெயர் பாரதம் என மாறுவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பிற்கு ‘இந்தியா ’ என பெயர் வைத்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு இந்தியா என இந்திய நாட்டின் பெயர் வரும்படி பெயர் வைக்கப்பட்டதிலிருந்து ஆளும் பாஜக அரசு தொடர்ந்து இந்தியா என்ற பெயரை தவிர்த்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல், தற்போது இந்தியா எனும் பெயருக்கு பதில் பாரத் எனும் பெயரை குறிப்பிட வேண்டும் என்ற குரல் பாஜக ஆதரவாளர்களின் ஒருமித்த குரலாக மாறி உள்ளது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில், இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றம் செய்யப்படுவதோ அல்லது மற்ற அரசு குறிப்பேடுகளில் இந்தியாவின் பெயருக்கு பதிலாக பாரதம் என குறிக்கும் வகையில் சொல் மாற்றம் செய்யப்படுவது பற்றிய தீர்மானங்களோ நிறைவேற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதால், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில், உசிலம்பட்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாரதம் என இந்தியாவின் பெயரை மாற்றுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு..
“பாரதம் என இந்தியாவின் பெயர் மாறுவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என கூறியுள்ளார். இந்தியாவுக்கு பாரத் என பெயர் மாற்றுவதில் எந்த தவறுமில்லை.
இந்தியா – பாரதம் எல்லாம் ஒன்று தான். தற்போது அனைவரும் பழமையை விரும்புகிறார்கள். அதேபோல தான் பாரதம் என்ற பெயர் மாற்றமும். அதில் எந்த தவறும் இல்லை. இந்த மாற்றத்தை அதிமுக ஆதரிக்கிறது. எடப்பாடி பழனிசாமியும் ஆதரிப்பார்” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours