புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை பரவத்தொடங்கியுள்ள நிலையில், ஆளும் பாஜக மணிப்பூர் பற்றி எரிவதை விரும்புவதாக தெரிகிறது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பாஜகவை விமர்சித்து வெளியிட்டுள்ள பதிவில், “உங்களுடைய இரட்டை இஞ்சின் ஆட்சியில் மணிப்பூர் பாதுகாப்பாக இல்லை. கடந்த 2023 மே முதல், அங்கு கற்பனைக்கு எட்டாத வலிகள், பிரிவுகள் மற்றும் கொதித்தெழும் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன.அது அங்குள்ள மக்களின் எதிர்காலத்தை அழித்து விட்டது.
நாங்கள் மிகவும் பொறுப்புடன் இதனைச் சொல்கிறோம், பாஜக வேண்டுமென்றே மணிப்பூர் பற்றி எரிவதை விரும்புகிறது. ஏனெனில் அது அவர்களின் பிரிவினைவாத வெறுப்பு அரசியலுக்கு உதவுகிறது.
நவம்பர் 7-ம் தேதி முதல் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்படும் பட்டியலில் பல மாவட்டங்கள் புதிதாக இணைகின்றன. வன்முறைத் தீ அண்டையில் உள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரவுகிறது.
நீங்கள் (பாஜக) அழகான எல்லைப்புற மாநிலமான மணிப்பூரில் தோல்வியடைந்து விட்டீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் மணிப்பூருக்குச் சென்றாலும், அம்மாநில மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் படி கைவிட்ட உங்களை மன்னிக்கவும் மறக்கவும் மாட்டார்கள்.
அவர்களின் துயரங்களை துடைக்கவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் ஒருபோதும் அங்கு நீங்கள் செல்லவில்லை என்பதையும் மறக்கமாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் காவல் நிலையம் மற்றும் சிஆர்பிஎஃப் முகாம் அருகே ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தூப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து குகி தீவிரவாதிகள் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆறுபேரைக் கடத்திச் சென்றனர். இந்த ஆறு பேரின் உடல்கள் அங்குள்ள ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் வெள்ளி, சனி கிழமைகளில் கண்டெக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மணிப்பூரில் மீண்டும் போராட்ட பதற்றம் வெடித்தது.
+ There are no comments
Add yours