நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஆளும் பாஜக மேற்கொண்டது என காங்கிரஸ் எம்பியும், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது முதல் உரையை நேற்று நிகழ்த்தினார். அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி அதுதொடர்பான விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பிரியங்கா காந்தி பேசியதாவது:
நமது நாட்டின் விடுதலை போராட்டம் தனித்தன்மை வாய்ந்தது. நமது விடுதலை போராட்டம் அகிம்சை மற்றும் சத்தியத்தின் அடிப்படையில் நடைபெற்றது. அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி போன்ற தலைவர்களின் பங்களிப்புடன் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. அரசியல் சாசனம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது. நமது இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு துணிச்சல் கிடைத்தது. எவ்வளவோ சவால்கள் இருந்தும் மகளிர் போராட அரசியல் சாசனம் தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்குகிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் நமக்கு பாதுகாப்பை வழங்கும் கவசமாகும்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்த பாதுகாப்பை உடைக்க முயற்சிகளை மேற்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஆளும் பாஜக மேற்கொண்டது.
ஒவ்வொரு குடிமகனால் ஓர் அரசை உருவாக்கவும் முடியும். தகர்க்கவும் முடியும். அரசியலமைப்பை மாற்றுவது பற்றிய விவாதங்கள் இந்த நாட்டில் வேலை செய்யாது என்பதை நடந்து முடிந்துள்ள தேர்தலின் மூலம் பாஜகவினர் உணர்ந்துள்ளனர்.
நேரடி நியமனம், தனியார்மயமாக்கலால் இடஒதுக்கீடு முறையை வலுவிழக்கச் செய்கின்றனர். கடந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றிருந்தால் இந்நேரம் அரசியலமைப்பை மாற்றியிருக்கும். கடந்த தேர்தலுக்குப் பின்னர்தான் அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்று பேசி வருகின்றனர்.
கடந்த காலத்தை பற்றி பேசும் பாஜக, இப்போது என்ன செய்கிறார்கள் என்பதை பேச வேண்டும். எல்லாவற்றிற்கும் நேருதான் பொறுப்பா? அரசியலமைப்பு உருவாக்கத்தில் நீங்கள் எவருடைய பெயரை(நேரு) நீங்கள் சில சமயங்களில் பேசத் தயங்குகிறீர்களோ, அவர் எச்ஏஎல், பெல், செயில், கெயில், ஓஎன்ஜிசி, என்டிபிசி, ரயில்வே, ஐஐடி, ஐஐஎம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு உள்ளவர், அவரை நீங்கள் புத்தகங்களில் இருந்து துடைக்க முடியும். ஆனால், இந்த தேசத்தின் சுதந்திரத்தில், இந்த தேசத்தை கட்டியெழுப்பியதில் அவரது பங்கை ஒருபோதும் அழிக்க முடியாது.
சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்த சிலர் எங்களைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களில் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் மகனின் வயது மற்றவர் அவரைவிடவும் இளையவர். அவர்களின் தந்தை தையல்காரர். அவரது ஒரே விருப்பம் தனது குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்பது. அதில் ஒருவர் மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அவரது இதயத்தில் இந்த கனவும் நம்பிக்கையும் விதைக்கப்பட்டது.
இன்று நாட்டு மக்கள் அனைவரும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது. அதன் மூலமாக ஒவ்வொருவருடைய நிலைமையையும் அறிந்து அதற்கேற்ப கொள்கைகளை உருவாக்க முடியும்.
பாஜகவினரால் நாட்டில் ஒற்றுமையை உருவாக்க ஒருபோதும் முடியாது, அவர்கள் மக்களிடையே பயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மணிப்பூர், உத்தர பிரதேசத்தில் நாங்கள் அதனைப் பார்த்தோம். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் முதல் உரையை அவரது சகோதரரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, சசி தரூர், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
+ There are no comments
Add yours