எந்த அளவுக்கும் பாஜக இறங்கும் …சரத் பவார் !

Spread the love

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வியாழக்கிழமை இரவு அமலாக்கத் துறை கைது செய்தது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை.

இந்த சம்மன்களை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுரேஷ் குமார் கெய்த், மனோஜ் ஜெயின் அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள கேஜ்ரிவாலின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 9.20 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜர்படுத்துகின்றனர்.

இதனிடையே, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்குச் செல்லும் சாலைகளில் பல அடுக்கு தடுப்புகளை ஏற்படுத்தி போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை எதிர்த்து பாஜக அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல் போராட்டம் காரணமாக மத்திய டெல்லிக்குச் செல்லும் பாதையை தவிர்க்குமாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பாஜக தலைமை அலுவலகம், அமலாக்கத் துறை அலுவலகம் உள்ள மத்திய டெல்லி சாலை மூடப்பட்டுள்ளன. அதேபோல் போலீஸாரின் அறிவுறுத்தலின் படி, டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படுவதாக மெட்ரோ ரயில்நிறுவனம் அறிவித்துள்ளது.

டெல்லி முதல்வர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக கேஜ்ரிவாலை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கும். ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள், மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் போன்றவர்களின் கைது உட்பட இந்த வழக்கில் எடுக்கப்பட்டிருக்கும் 16 கைது நடவடிக்கையாகும்.

இதனிடையே, டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், “அமலாக்கத் துறையினர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டின் மூலை முடுக்கு எல்லாம் சோதனை நடத்தினர். வீட்டிலிருந்து ரூ.70,000 மட்டும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அரவிந்த் கேஜ்ரிவாலின் மொபைல் போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை எந்த ஒரு ஆதாரத்தையோ, சொத்து ஆவணங்களையோ, சட்டவிரேத பண பரிவர்த்தனை அல்லது அதற்கான ஆவணம் எதையும் கைப்பற்றவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நள்ளிரவு விசாரணை மூலமாக அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வியாழன் இரவு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறுகையில், “சிறையில் இருந்தபடியே அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வர் தொடர்வார். தேவைப்பட்டால் அவர் சிறையில் இருந்த அரசை நடத்துவார். அவர் குற்றவாளி என்று முடிவாகும் வரை சிறையில் இருந்தபடியே கேஜ்ரிவால் முதல்வராக தொடரக்கூடாது என்று எந்த விதிகளும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

“அரவிந்த் கோஜ்ரிவால் தான் விதைத்தை இப்போது அறுவடை செய்துள்ளார். அவரது கைது நடவடிகை ஊழல் தோற்றுவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறது. அரவிந்த் கேஜ்ரிவால் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். கேஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்வார் என்று அக்கட்சித் தலைவர்கள் கூறுவது அரசியல் அணைப்பு விதிகளை அவமதிக்கும் செயலாகும்.” என்று டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.

இதனிடையே இண்டியா கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் என்சிபி (சரத் பவார் அணி) கட்சிகள் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. “மக்களவைத் தேர்தலைக் கண்டு பயப்படுகிறது. பீதியில் எதிர்க்கட்சிகளுக்கு எல்லாவிதமான தொல்லைகளைக் கொடுக்கிறது” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மற்றொரு கூட்டணி கட்சியான என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார், “ஆட்சியை பிடிப்பதற்காக எந்த அளவுக்கும் பாஜக இறங்கும் என்பதை அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது காட்டுகிறது. சட்டவிரோதமான இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக இண்டியா கூட்டணி ஒன்றுபட்டுள்ளது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவாலையோ, அவரது குடும்பத்தினரையோ இன்று சந்தித்து தனது அரசியல் ஆதரவினை தெரிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours