காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி கர்நாடகா அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களில் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறக்க மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையமும் தண்ணீர் திறந்து விட அறிவுறுத்திய நிலையில் அந்த உத்தரவை ஏற்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.
இதனால் தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வை நியமித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் மீண்டும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா அரசு இன்று மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிடக் கோரும் தமிழக அரசின் மனு, உச்ச நீதிமன்றத்தில் 6-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கர்நாடகா மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours