நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராச்சி மையமான இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது .
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக LVM MK 3 ராக்கெட்டில் அனுப்பட்ட 3900 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையை முடித்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
இஸ்ரோவின் தொடர் கண்காணிப்பில் இருந்து வரும் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரின் இறுதி வேக குறைப்பு நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் லேண்டரைத் தரையிறக்க விஞ்ஞானிகள் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நிலவின் தென்துருவப் பகுதியில் நாளை மாலை சந்திரயானின் விக்ரம் லண்டர் தரையிறங்க சாதகமான சூழல் இல்லையென்றால் நிலவில் சந்திரயான் தரையிறக்கம் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படும் என இஸ்ரோவின் விண்வெளி செயல்பாட்டு மையத்தின் விஞ்ஞானி நிலேஷ் எம்.தேசாய் தகவல் தெரிவித்திருந்தார் .
இதனால் சந்திரயான் தரையிறக்கம் நாளை குறித்த நேரத்தில் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் நிலவுக்கு 70 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு புதிய புகைப்படங்களை விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பியது .
நேரடியாக தென்படும் காட்சிகளையும் தன்னிடம் உள்ள வரைபடத்தையும் ஒப்பிட்டு தரையிறங்கும் இடத்தை லேண்டர் பரிசீலித்து வருவதாகவும், தரையிறங்கும் இடத்தை தீர்மானித்ததும் திட்டமிட்டபடி நாளை மாலை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது
+ There are no comments
Add yours