தமிழக தலைநகர் சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சாலை மார்க்கமாக செல்ல சுமார் 350 கிமீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதன் பயண நேரமானது சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரையில் கூட ஆகும். அந்தளவுக்கு அந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசலும் பல்வேறு இடங்களில் காணப்படும் .
இதனை தவிர்க்கவே, மத்திய அரசு புதிய சாலை திட்டத்தை கொண்டு வந்து அதன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள்ளது. இந்த சாலை திட்டத்தின் கீழ் சுமார் 350 கிமீ இருந்த தூரமானது, பல்வேறு கணக்கீடுகள் கொண்டு, தற்போது 258 கிமீ அளவுக்கு சுருக்கப்பட்டுள்ளது. இந்த சாலையானது 4 வழிசாலையாக அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திட்ட மதிப்பீடு சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் இந்த சாலை பணி எப்போது திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என பலரும் எதிர்பார்த்த நேரத்தில் தற்போது அதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னையில் இருந்து டெல்லி வரை சாலை மார்க்கமாக விரைவில் நெடுஞ்சாலை அமைக்கப்படும் எனவும், அதற்கு முன்னர் தற்போது சென்னை முதல் பெங்களூரு வரையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது என்றும், வரும் ஜனவரி மாதம் இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 2 மணிநேரத்தில் பயணிக்கலாம் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours