புனே: சாவர்க்கர் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது சாவர்க்கரின் பேரன் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மார்ச் 5, 2023 இல் லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில் சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, ஏப்ரல் 2023 இல் சாவர்க்கரின் சகோதரர்களில் ஒருவரின் பேரன் சாத்யகி சாவர்க்கர், ராகுல் காந்தி மீது புனே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரில், ‘ராகுல் காந்தி பல ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சாவர்க்கரை பலமுறை அவதூறாகவும், தவறாகவும் பேசி வருகிறார். மார்ச் 5, 2023 அன்று, லண்டனில் நடந்த வெளிநாட்டு காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது. சாவர்க்கரின் நற்பெயருக்குக் கேடு விளைவிப்பதற்காக, சாவர்க்கருக்கு எதிராக அவர் வேண்டுமென்றே தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் மன வேதனையை ஏற்படுத்தும் வார்த்தைகளை ராகுல் காந்தி வேண்டுமென்றே உச்சரித்தார் என்றும் சாத்யகி சாவர்க்கர் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியை சட்டப்படி விசாரிக்க வேண்டும் என்றும், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சாத்யகி நீதிமன்றத்தில் வலியுறுத்தினார். இந்த அவதூறு வழக்கில் அக்டோபர் 23ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராகுமாறு புனே நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், சாவர்க்கருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களுக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நாசிக் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours